யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார்,
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவது, உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.
இது தொடர்பில், தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிநிதி ,மற்றும் அதனுடன் இணைந்ததாக வட மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற முக்கியமான துறை சார்ந்த உத்தியோகத்தர்களை அழைத்து யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது
குறித்த கலந்துரையாடலில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சம்பந்தமான பல விடயங்கள் ஆராயப்பட்டது.
அதிலே பொருத்தமற்ற அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்பி செல்லுவது , அநாவசியமான கண்ணாடிகள் பொருத்தி இருப்பது மற்றும் தேசிய கொடியினை அவமதிக்கும் வகையிலே கிழிந்த மாசு படிந்த வாகனங்களுக்கு பொருத்தமற்ற அளவிலான தேசியக்கொடிகளை பொருத்துதல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டது
அத்துடன், வாடகை முச்சக்கர வண்டியினை செலுத்துபவர்கள், மரியாதைக்குரிய ஆடைகளை அணிந்து, நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
அதேவேளை மிக முக்கியமாக 2017 ம் ஆண்டு முதலாம் இலக்க மோட்டார் வாகன சட்டத்தினுடைய ஒழுங்கு விதிக்கு, அமைய நாடு முழுவதிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிப்பது கட்டாயம் ஆகும். அதனால் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு உரிய கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும்.
போக்குவரத்து அதிகார சபையின் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் உள்ளதாகவும், ஆனாலும் யாழ்ப்பாண நகர் பகுதியில் 2025 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே ஜூலை மாதம் 30 ம் திகதிக்கு முன்னதாக வாடகைக்கு சேவையில் ஈடுபடும், சகல முச்சக்கர வண்டிகளும் கட்டண மானி பொருத்தப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வேண்டும்.
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை வாடகை வண்டியாக பாவிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும், தரிப்பிடங்களில் தரித்து நிற்பதற்கான பதிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு புதிய பதிவுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது. என தெரிவித்தார்.