அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவுக்கு சம்பந்தன் இரங்கல்!

மறைந்த அஸகிரிய பீடாதிபதி கலகம சிறி அத்தாதஸ்ஸி தேரரின் மறைவுக்கு தமிழ்த்தேசிய் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில்

மறைந்த கலகம தேரருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிர்மலமான வாழ்க்கையை வாழ்ந்த கலகம தேரர், நாட்டில் பௌத்த சாசனத்தை மிளிரச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.

1936ஆம் ஆண்டு துறவற வாழ்க்கையை ஆரம்பித்த தேரர், எட்டு தசாப்த காலமாக பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைத்தவர். இவ்வாறான அர்ப்பணிப்புக்களைக் கொண்ட ஒரு துறவியின் சேவை இலங்கை மக்களுக்குக் கிடைத்தமை மிகப் பெரிய பாக்கியமாகும். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களுக்கு தேரர் பல சேவைகளை வழங்கியுள்ளார். இனம், மதம், குலம் போன்றவற்றைப் பார்க்காது கலகம தேரர் மக்களுக்கு ஆற்றிய சேவை போற்றத்தக்கது. கலகம தேரருக்கு மோட்சம் கிடைக்கவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

அத்துடன், அஸ்கிரிய பீடாதிபதி கலகம தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் அளவில் கண்டியில் நடைபெறவுள்ளது. நாளைய தினம் துக்கதினமாக அறிவிக்கப்பட்டு அரச நிறுவனங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாளை கண்டி பயணமாகி அஸ்கிரிய பீடாதிபதி கலகம தேரரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். மறைந்த அஸ்கிரிய பீடாதிபதி கலகம தேரருக்கு மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுவதுடன் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிச் சடங்கும் நடைபெறும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை துக்கதினமாகையால் கண்டியில் மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், தியேட்டர்கள் ஆகியன மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts