அவுஸ்திரேலிய கடல் பயணத்தை தவிருங்கள்: த.தே.கூ.

suresh-peramachchantheranசட்டவிரோதமாக ஆபத்து நிறைந்த அவுஸ்திரேலியா கடல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடிய கடல் பிரயாணங்களை தவிருங்கள். இவ்வாறு போய்ச் சேருவதன் மூலம் அங்கு இருப்பதற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்க மாட்டாது என அவுஸ்திரேலியா அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது.

இடைத்தரகர்களிடம் பலர் பல இலட்சக்கணக்கான ரூபாவை கொடுத்து ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா். படகுகளில் எந்தவித வசதிகளுமின்றி போய்ச் சேருவீர்களா என்ற உறுதி கூட இல்லாமல் படகுகளில் ஏற்றப்படுகின்றீர்கள்.

குடும்பம் குடும்பமாக பணம் செலவழித்து சென்றுவிட்டு மீண்டும் இங்கு வருகின்றபோது எதுவுமற்றவர்களாக இருக்கப் போவதையும் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு எந்த நேரமும் மரணத்தை தழுவக்கூடிய நீண்ட நேர கடல் பிரயாணத்தை தவிர்த்து, இந்த மண்ணில் வாழ்வதற்காய் முயற்சி செய்யுங்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

இங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு பல தரப்பினர்கள் மீதும் குற்றச்சாட்டு இருக்கின்றன. மேலும், மிகப் பெரும்பான்மையாக வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் தான் அதிகளவில் அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.

அவுஸ்திரேலியாவிற்கு கடல் பயணம் மேற்கொள்கின்ற மக்கள் உயிருடன் போய்ச் சேருகிறார்களா என்பது கூடத் தெரியாத நிலையிலையே இங்குள்ள உறவுகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்வது என்பது தற்போது புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. அங்கு செல்வதிலேயே அதிகளவானோர் விரும்புகின்ற நிலைமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு கடல் பயணத்தை மேற்கொண்டவர்களில் எவ்வளவு பேர் இதுவரையில் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாது. எவ்வளவு மோசமான படகுகளில் அவர்கள் கொண்டு செல்லப்படுகின்றார்கள் என்பது கூட தெரியாமல் செல்கின்றார்கள்.

இவர்களை அனுப்புபவர்களது முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பது. இதனை விடுத்து இவர்கள் உயிருடன் போய்ச் சேர்கின்றார்களா என்பது தொடர்பாக எந்தவித அக்கறையும் இல்லை.

அவுஸ்திரேலியாவுக்கு கடல் பயணத்தை மேற்கொள்வோருக்கு நாம் கூறுவது அவுஸ்திரேலியா அரசாங்கம் மிகக் காத்திரமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. அதாவது இவ்வாறு செல்கின்றவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் இருக்க வைக்கப்பட மாட்டார்கள். மாறாக அருகிலிருக்கக் கூடிய வேறொரு மண்ணுக்கே அனுப்பப்படுவார்கள்.

இல்லாவிடின் இவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற பலவிதமான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பணத்தைச் செலவழித்து அதாவது நகைகளை விற்பனை செய்து, காணிகளை விற்பனை செய்து இலட்சக்கணக்கான ரூபாவை கொடுத்து கடலில் தாழ்வோமா அல்லது தாழ மாட்டோமோ என்ற பயத்தில் சென்று இறுதியில் யார் மிஞ்சுகின்றீர்கள், யார் இறக்கின்றீர்கள் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியாது.

மேலும், இங்கிருக்கின்ற மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசாங்கம் மக்களுக்கான வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இராணுவத்தினாலோ அல்லது பொலிஸாரினாலோ எந்தவித கெடுபிடியும் இல்லை. இந்த மண்ணில் நிம்மதியாக வாழலாம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். நிச்சயமாக இதனை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்’ என்றார்.

Related Posts