அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகளால் வெற்றி!!

இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் பகல்-இரவு கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி (DLS) 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 13ஆவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 8 மணிக்கு மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

ஒரு மணித்தியாலம், 5 நிமிட தடைக்குப் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்த போது அவுஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 44 ஓவர்களில் 282 ஓட்டங்கள் என திருத்தப்பட்டது.

க்ளென் மெக்ஸ்வெலின் ஆட்டமிழக்காத அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் அவுஸ்திரேலியா 42.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.

இதன் மூலம் குசல் மெண்டிஸின் நிதானமான அரைச் சதமும் வனிந்து ஹசரங்க டி சில்வாவின் அதிரடி துடுப்பாட்டமும் வீண் போயின.

அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் ஓட்டம் பெறாமல் மஹீஷ் தீக்ஷனவின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

ஆனால், ஆரோன் பின்ச் (44), ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது, பின்ச் ஆட்டமிழந்தார்.

ஸ்மித், மானுஸ் லபுஸ்சான் (24) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லபுஸ்சான் ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கை 141 ஓட்டங்களாக இருந்தபோது சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவன் ஸ்மித்தின் பெறுமதியான விக்கெட்டை 19 வயதான அறிமுக வீரர் துனித் வெல்லாலகே வீழ்த்தி பெரும் பாராட்டைப் பெற்றார். ஸ்மித் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

அலெக்ஸ் கேரியுடன் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 44 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

30 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களாக இருந்தபோது 7ஆம் இலக்க வீரராக க்ளென் மெக்ஸ்வெல் களம் புகுந் தார்.

அவர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 51 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அவருக்கு பக்கத்துணையாக துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் கேரி 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துனித் வெல்லாலகெ 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் 5 பேர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததுடன் அவர்களில் மூவர் அரைச் சதங்களைக் குவித்தனர்.

தனுஷ்க குணதிலக்க (55), பெத்தும் நிஸ்ஸன்க (56) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 1ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து தனஞ்சய டி சில்வா (7) சீக்கிரமாக ஆட்டம் இழந்து சென்றார்.இந் நிலையில் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க (37) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால், தசுன் ஷானக்க (6), சாமிக்க கருணாரட்ன (7) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இலங்கை மீண்டும் தடுமாற்றம் அடைந்தது. எனினும் குசல் மெண்டிஸும் வனிந்து ஹசரங்கவும் 25 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 300 ஓட்டங்களாக உயர்த்தினர்.குசல் மெண்டிஸ் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.வனிந்து ஹசரங்க டி சில்வா 19 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 37 ஓட்டங்களை விளாசினார்.

பந்தவீச்சில் மார்னுஸ் லபுஸ்சான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷ்டன் அகார் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Related Posts