அவுஸ்திரேலியா அணியை வென்றது யாழ்.மாவட்ட அணி

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிநேகபூர்வ இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி 150 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மெல்போன் நகர யாராவலி துடுப்பாட்ட சங்க அணியினை வென்றது.

aust-cricket-2

17 வயதுப்பிரிவு அணிகளுக்கான மேற்படி சிநேகபூர்வமான இருபது – 20 துடுப்பாட்டப் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.

இதில் அவுஸ்ரேலியா மெல்போன் நகர யாரா வலி துடுப்பாட்ட சங்க அணியும் யாழ்.மாவட்ட தெரிவுத் துடுப்பாட்ட அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்.மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி யாழ்.மாவட்ட அணி 20 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 4 இலக்குகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் என்.கஜானன் 64, எஸ்.கிரிசாந் 32, ஜெனி பிளமிங் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

184 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 13.5 பந்துபரிமாற்றங்களில் 53 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

பந்துவீச்சில் யாழ்.மாவட்ட அணி சார்பாக, என்.கதியோன் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்நிகழ்வில் இலங்கை படைகளின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, யாழ்.மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதயபெரெரா, யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts