அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
அடிலெய்டில் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைக் குவித்தது.
வேகமான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்ட அவ்வணி, 4 ஓவர்களில் 40 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர், 2 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், விராத் கோலி, சுரேஷ் ரெய்னாவின் சிறந்த இணைப்பாட்டமூடாகப் பெறப்பட்ட 134 ஓட்டங்களின் உதவியுடன், சிறந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் விராத் கோலி, 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைக் குவித்தார். தவிர சுரேஷ் ரெய்னா 41 (34), றோஹித் ஷர்மா 31 (20) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷேன் வொற்சன், 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற அவ்வணி, 8.5 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 89 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டாலும், அதன் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஆரொன் பின்ச் 44 (33), ஸ்டீவன் ஸ்மித் 21 (14) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அறிமுக வீரர் ஜஸ்பிறிட் பும்ரா மற்றும் இரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.