அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துப் படகுகளான ‘மிஹிகத்த’, ‘ரத்ன தீப’ படகுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை கொழும்புத் துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு அமைச்சர் திரு. ஸ்கொட் மொரிசன் அவர்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார். இந்த இரண்டு ரோந்துப் படகுகளும் ஒரு நல்லெண்ண அம்சமாக இலங்கைக் கடற்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் மொரிசனுக்குமிடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த ரோந்துப் படகுகளை வழங்கியமைக்காகவும் சர்வதேச மட்டத்தில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
புகலிடம் கோரி சட்டவிரோத படகுகளில் செல்வோரை தவிர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கிடையே இருந்துவரும் உறவுகளைப் பாராட்டிய திரு மொரிசன் அதனை மிக நெருங்கிய ஒத்துழைப்பு என வர்ணித்தார்.
சட்டவிரோத புலம்பெயர்வைத் தவிர்ப்பதற்காக இரண்டு நாடுகளும் நடவடிக்கை எடுத்துவருகின்ற நிலையிலும் சில குழுக்கள் தொடர்ந்தும் அதனை ஊக்குவித்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இலங்கைக்கு வருகைதந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய அமைச்சர் போருக்குப் பிந்திய இலங்கையின் அபிவிருத்திகள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தியைப் பொருத்தவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு. மொரிசன், இந்த முன்னேற்றம் ஒரு நல்ல சான்று எனவும் தெரிவித்தார்.
வடக்கில் நடைபெற்ற தேர்தல் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எனவும் அவர் விபரித்தார். நாட்டில் நடைபெறும் அரசியல் செயன்முறை குறித்து கருத்துத்தெரிவித்த திரு மொரிசன், மிகச் சிறந்த பயனைத் தரும் செயன்முறை நாட்டுக்குள்ளே இருந்துவரும் செயன்முறையாகும் எனக் குறிப்பிட்டார்.
போருக்குப் பிந்திய இலங்கையின் முன்னேற்றத்திற்கு முடியுமான எல்லா வழிகளாலும் உதவ அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது முதன்முறையாக கட்டுநாயக்க அதிவேக பாதையில் பயணித்த அனுபவத்தைக் கொண்ட அவுஸ்திரேலிய அமைச்சர் இது முக்கிய உட்கட்டமைப்பு அம்சம் என வர்ணித்ததோடு, இலங்கையின் சுற்றுலாவுக்கான வாய்ப்புவளம் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு முறையான உட்கட்டமைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரண்டால் மற்றும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் ரொபின் மூடி ஆகியோரும் அமைச்சர் மொரிசனுடன் இணைந்து கொண்டனர்
.
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் திரு ரோஹித்த அபேகுணவர்தன,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷெனுகா செனவிரத்ன,பாதுகாப்பு படையணி பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயந்த பெரேரா மற்றும் இராணுவத்தளபதி லெப்பிடினன் ஜென்ரால் தயா ரத்னாயக்க
ஆகியயோரும் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.