அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றையதினம் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை 19 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
இதற்கு மேலதிகமாக இன்றைய தினம் கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றதனடிப்படையில் தேசிய ரீதியில் மற்றும் கோவிட் தடுப்பு செயலணியின் விதிமுறைகளுக்கு அமைய தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதேபோல யாழ்.மாவட்ட நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் பிரச்சனைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தல். அதனை பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக ஆராயப்பட்டது .
குறிப்பாக கடல்கடந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி யாளர்கள் சிலவேளைகளில் ஏனைய தமிழ் நாட்டு மீனவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது கைதுகளும் இடம்பெற்றுள்ளன .
அதாவது சட்டவிரோத கடல் பயணங்கள் அதேபோல சட்டவிரோத தொடர்பாடல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மீன்பிடி மக்களுக்கும் அத்தோடு கரையோரப் பகுதி மக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது.
தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் ஆராய பட்டதோடு தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
சுகாதார அமைச்சு , கோவிட் மத்திய நிலையத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தடைகள் வழிகாட்டல்களை தொடர்ச்சியாக பின்பற்றுதல் அதனை மாவட்ட நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து செயற்படுத்தல் தொடர்பாகவும் தீர்மானித்திருந்தோம் .
மேலும் நெரிசல் மிக்க நகரப்பகுதிகளில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில போக்குவரத்து ஒழுங்குகள், சில மாற்றங்களை பின்பற்றுதல் தொடர்பிலும். ஆலோசிக்கப்பட்டது.
வைத்தியசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறிப்பாக ஒக்சிஜன் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதாவது வடக்கு மாகாணத்தில் திருப்திகரமாக இருந்தாலும் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் ஆசனத்திற்கு அமைய பயணிகள் ஏற்றவேண்டும் இருந்தபோதும் தூர இடங்களுக்கான சேவைகளை அந்த விதத்தில் செயற்படுத்தும் போது சேவைகளை அதிகரிப்பது தொடர்பான ஒரு வேண்டுகோளை இலங்கை போக்குவரத்து சபை ,தனியாரிடம் கோரப்பட்டுள்ளது.
அவசர கால நிலைக்கு வடக்கு மாகாணம் தயாராக இருக்க வேண்டும் எனவ அறிவுறுத்தப்பட்டுள்ளது அந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
சகல வழிபாட்டு தலங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ஆலயத்தில் மதகுரு மற்றும் உபயகாரருடன் மக்களின் பங்கு பற்றுதல் இன்றி ஆலய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
திருமண மண்டபங்களை பொறுத்தவரை சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்பு ஏற்கனவே தேசிய மட்ட சுகாதார வழி காட்டல் களுக்கமைய திருமண மண்டபங்களை இயங்கலாம் என்றும் ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வோரின் அவருடைய பெயர் பட்டியல் உட்பட பல விவரங்களை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மண்டப உரிமையாளர்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்ற வேண்டும் என இதனை கண்காணிப்பதற்கு பொலிஸ் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல சினிமா திரையரங்கு தொடர்பிலும் ஆராயப்பட்டது யாழ் மாவட்டத்தில் 25 வீத பங்களிப்புடன் சினிமா திரையரங்கில் செயற்படுத்துவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது.
தற்போதைய கொரோனா நிலைமையில் யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அபாயமான நிலைமையினை எந்த நேரமும் எதிர்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
யாழ் மாவட்ட மக்கள் இக்கட்டான நிலைமையை கடந்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
ஏற்கனவே அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்.
பொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனக் கூறப்படுகின்றது இருந்தபோதிலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன அவற்றை பின்பற்றி செயற்படல் நல்லது. ஆகவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.