அழிவுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் பொறிமுறை வேண்டும்: தவராசா

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பண்பாட்டு அழிப்பு முதல் அதன் பின்னரான இன அழிப்பு வரை, அவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளேனும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ். பொது நூலக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “அரச படையினரின் ஒரு பிரிவினரை சேர்ந்தவர்களை தூண்டி இந்த நூலகம் அழிக்கப்பட்டதாக பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அழிவை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த அசம்பாவிதங்களை முன்னெடுத்தவர்களை அக்கால அரசாங்கம் தவறியிருந்த அதேவேளை, இன்றுவரை அந்த நிலையே தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

இவ்வாறான பல்வேறு அழிவுகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுதல் மற்றும் அடையாளம் காணப்படுவதற்கு மாறாக அவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளேனும் இதுவரை வகுக்கப்படவில்லை.

இந்நிலையில், நல்லாட்சி அரசேனும் இப்பொறிமுறையை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதுடன், அதற்கான அழுத்தம் கொடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

Related Posts