அழிவின் விளிம்பில் யாழ் குடாநாடு!

விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல.

போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை, இயற்கை பூச்சிகொல்லியைப் பயன்படுத்தி வந்த குடாநாட்டு மக்கள் தற்போது குறுகிய காலத்தில் அதிகளவான உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதிலும், மேற்கொண்ட முதலீட்டுக்கு நட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தற்போது யாழ்குடாநாட்டு மக்களின் வாழ்வை மெல்லமெல்ல அழித்து வருகின்றன.

இது தொடர்பில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் தெரிவிக்கையில், யாழ்குடாநாடானது முற்றுமுழுதாக தரைக்கீழ் நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் பிரதேசம். தற்போது இதன் நிலத்தடி நீரானது செயற்கைப் பசளையாலும், பூச்சிகொல்லி மருந்துகளாலும் மாசடைந்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு புற்றுநோய் அதிகரித்துக்கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். இதைவிட நிலத்தடி நீரில் அதிகளவான நைத்திரேற் கலக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்திருப்பதாகவும், இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிகரித்த இரசாயனப் பாவனையெனவும் தெரிவித்துள்ளார். இந்த இரசாயனப் பாவனை யின் பெருக்கத்தால் இம்மக்கள் நடுத்தரவயதிலேயே பல்வேறு வகையான புற்றுநோயிற்கு ஆளாகின்றார்கள் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் வெளியான சுகாதார அறிக்கையின்படி குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் குடாநாட்டிலேயே அதிகமானவர்களாகக் காணப்படுவதாகவும், அதற்கான காரணத்தை ஆராயும்போது யாழ்குடாநாட்டில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பீடைகொல்லிகள், களை நாசினிகள், செயற்கைப் பசளைகளே காரணமாக இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரசாயனப் பசளையில் அதிகளவாகக் காணப்படும் நைட்ரஜன் மழைநீரோடு கலந்து நீர்நிலைகளைச் சென்றடைவதால் மனிதர்கள் மட்டுமல்ல குடாநாட்டு விலங்குகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. நைட்ரஜன் போன்ற நச்சுப் பதார்த்தங்கள் கலந்த நீரினைப் பருகுவதால் சிறுநீரகக் கோளாறு, இதயநோய், நீரிழிவு, புற்றுநோய், கண்வியாதிகள், தோல்நோய்கள், சிறுபிள்ளைவாதம், குழந்தை இறந்து பிறத்தல், கருச்சிதைவு, மூளை வளர்ச்சி குறைவு என தீராத நோய்கள் ஏற்படுவதுடன் இறுதியில் மரணம் நிகழ்கின்றது.

ஒரு லீற்றர் குடிநீரில் 10மி.கிராம் நைத்திரேற்று கலந்திருந்தால் நீலக்குழந்தை பிறக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நைட்ரஜன் அதிகளவுள்ள செயற்கைப் பசளைகள் பாவிப்பதால் மண்ணில் அமிலத்தன்மை அதிகரிப்பதுடன் நாளடைவில் தாவரங்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்காது போகின்றது. இதனால் மண்ணும் வளமிழந்து போவதுடன் எதிர்காலத்தில் விவசாயம் மேற்கொள்ளமுடியாத சூழல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்சிகள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயற்கையோடு ஒன்றியிருந்த மக்கள் இல்லாமல்போய் பலவருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது மரக்கறிகள், மற்றும் பழவகைகள் பழுதடையாமல் இருப்பதற்காக இறந்த உடல்களை பழுதடையாமல் வைத்திருப்பதற்குப் பயன்படும் போமலின் வாயுவையே மரக்கறிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

பழங்களைக் கனியவைக்க காபைற் என்ற இரசாயனப் பதார்த்தை விசிறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் மாம்பழம், வாழைப்பழம், விளாம்பழம் போன்றவற்றில்கூட இதன் தாக்கத்தைக் காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பிள், ஒறேஞ், திராட்சைப்பழங்களிலும் அவை பழுதடையாமல் இருப்பதற்காக இரசாயனப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினால் நாட்பட்ட நோய்களான குடல் சார்ந்த நோய்கள், சமிபாட்டுத் தொகுதிகளில் ஏற்படும் நோய்கள், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு என்பனவும் ஏற்படுகின்றன.

துரதிஷ்டவசமாக தற்போது யாழ்ப்பாணத்தில் மீன்களுக்குக்கூட போமலின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில வியாபாரிகள் தெரிந்தோ தெரியாமலே லாபநோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்றனர். இன்றைய லாபம் நாளைய சந்ததியை இல்லாது அழித்துவிடும் என்ற நிலைக்கு யாழ் குடாநாடு தள்ளப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் மலசலகூட நீர் கிணற்று நீருடன் கலப்பது பாரிய பிரச்சனையாகவுள்ளது. சனத் தொகை அதிகரிப்பினால் யாழ் நகரப்பகுதியை அண்டிய பிரதேசங்களில் கிணற்றை அண்டியே மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மலத்தில் உள்ள கிருமிகள் மற்றும் நச்சுப்பதார்த்தங்கள் நேரடியாக நீருடன் கலக்கின்றன.

குடாநாட்டுக்கான இறைச்சியில் முதலிடமாக புறொயிலர் கோழிகளே உள்ளன. முன்னைய காலங்களில் நாட்டுக்கோழிகளை உணவாகச் சமைத்துச் சாப்பிட்ட குடாநாட்டுமக்கள் தற்போது விரைவுணவான புறொயிலர் கோழிகளையே உணவில் சேர்க்கின்றனர். 45 நாட்களில் செயற்கைமுறையில் உணவூட்டப்படும் இந்த புறொயிலர் கோழிகள் எவ்வாறு பருக்கின்றனோ அதே நிலமையே இந்த கோழிகளைச் சாப்பிடுபவர்களுக்கும் ஏற்படுகின்றது என்பது மறுக்கமுடியாததாகும்.

இதனை உண்பவர்கள் சிறுவயதிலேயே உடற்பருமனடைவதோடு, முதிர்ச்சியும் அடைகின்றனர். அதிகளவு கொலஸ்ரோலைக் கொண்ட இந்தக் கோழிகளை உண்பதால் இதயநோய், மாரடைப்பு, மலட்டுத்தன்மை போன்ற நோய்களுக்கு வித்திடுகின்றன என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய இந்த உணவுப் பழக்கத்தினால் குடாநாட்டு மக்களில் ஐந்து குடும்பத்தில் ஒரு குடும்பத்துக்கே குழந்தைப்பேறு கிடைப்பதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிப்பதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமானால், சுத்தமான குடிநீர், சுத்தமான உணவுப்பழக்கவழக்கங்கள், தேவையற்ற உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வது நிறுத்தப்படவேண்டும். இதற்கு மாகாண அரசும் மத்திய அரசும் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக, பேராசிரியர் சிவச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போது, யாழ் குடாநாட்டுக்கென சில விசேட சட்டதிட்டங்களை அமுல்படுத்தவேண்டுமெனவும், அப்படிச் செய்யாவிட்டால் குடாநாட்டுப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறுவதையோ அல்லது மக்களற்ற ஒரு பிதேசமாக குடாநாடு மாறுவதற்கு வெகுகாலம் எடுக்காது என எச்சரித்துள்ளார்.

Related Posts