அழகிய தாய்நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்!

எமது அழகிய தாய் திருநாட்டினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று(04) இலங்கைத் திரு நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் நேற்று ஏற்பாடாகியிருந்த சுதந்திரதின வைபவத்திற்கு ஜனாதிபதி தம் பாரியார் சகிதம் காலை 8.47 மணியளவில் வருகை தந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் தேசியக் கொடியேற்றி வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்து 10 பாடசாலைகளைச் சேர்ந்த 110 மாணவ மாணவியர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து 3 பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவிகளால் ஜயமங்கள கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக 2 நிமிடங்கள் மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஜனாதிபதியை வரவேற்கும் நோக்குடன் அவருக்காக 21 மரியாதை பீரங்கி வேட்டுக்களும் தீர்த்து வைக்க்பபட்டன. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி இங்கு விசேட உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது நாம் எமது நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தினை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடுகின்றோம். தேசிய வீரர்கள் சுதந்திர தின போராட்டத்துக்காக ஒன்றாக செயற்பட்டனர். அனைவரது ஒற்றுமையான செயற்பாட்டின் மூலமே நாம் வௌிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து வௌியேறினோம். 400 ஆண்டுகளாக வௌிநாட்டு ஆட்சியாளர்கள் காலத்திலே நமது நாடு பெற்றிருந்த பலவற்றினை நாம் இழந்து விட்டோம். எமது கலாசாரத்தினை பொருளாதாரத்தினை பாரம்பரியத்தினை நாம் இழந்தோம். நம்முடைய மன்னர்கள் நிர்மாணித்த பலவற்றினை நாம் இழந்தோம். 1505 ஆம் ஆண்டு முதல் போராடிய எமது வீரர்கள் உயிர்த்தியாகத்துடன் போராடியே சுதந்திரத்தினை 1948 இல் பெற்றோம்.

காலணித்துவ ஆட்சியின் போது விடுதலை பெற்றாலும் அவர்ககளால் உருவாக்கப்பட்ட பல பிரச்சினைகளை அவர்கள் விட்டுச் சென்றார்கள். இன மத குல பேதமில்லாமல் அன்று போராடினோம். ஆனால் சுதந்திரம் பெற்று இன்று 68 ஆண்டுகளை அடைந்த போதிலும் அவர்களால் விட்டுச் சென்ற பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டோமா என்று அனைவரும் தத்தமது மனசாட்சியை தொட்டு கேட்க வேண்டும். ஒற்றுமை நல்லிணக்கம் சகோதரதத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினைகள் தோன்றாமல் இருந்திருக்கும். பயங்கரவாதம் என்ற ஒன்று உருவாகாமல் இருந்திருக்கும். மொழி மத கலாசார பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் சரியாகப் புரிந்து தகுந்த முறையில் செயற்பட்டிருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியோடு இன்று தொழில்நுட்ப காலத்தில் பிறந்த பிள்ளைகள் புதிய சிந்தனைகளோடு செயற்படுகிறார்கள். அவர்கள் இன்று தம்மகத்தே புரட்சிகர எண்ணங்களை வைத்திருக்கிறார்கள். நாம் அவற்றினை புரிந்து ஒன்றிணைந்து அரச நிர்வாகத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

சுதந்திரம் என்ற சொல்லின் சரியான அர்த்தத்தினை நாம் புரிந்து கொண்டு செயற்படுவது மிக மிக முக்கியம். சுதந்திரம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்களை முன்வைக்க சிலர் முனைகின்றனர். ஆனால் நாம் அவற்றினை விடுத்து புதிய உலகத்தினை நோக்கி செல்ல வேண்டும். பாரிய சவாலான விடயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தினை பலப்படுத்தியுள்ள இன்றைய காலகட்டத்தில் இன்று மன்னர் ஆட்சி இல்லை. சுதந்திரம் பெற்று ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அது சரிவர செயற்பட முடியாாத காரணத்தினாலேயே 26 வருட காலமாக பயங்கரவாத பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் நாம் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். எமது மக்களை நாம் சரியான வழியில் இட்டுச் செல்ல வேண்டும். அரசியல் சமூக கலாசார பொருளாதார திருத்தங்களுக்கு முக்கிய இடங்களை நாம் வழங்கியுள்ளோம். யுத்தத்திற்கு பிறகான காலகட்டத்தில் குறிப்பாக 2009 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் சரியாக வழிநடாத்தப்படாத காரணத்தினாலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எமக்கு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது போர் முடிவடைந்த பின்னர் சிங்களம் தமிழ் முஸ்லிம் பறங்கியர் மலேயர் எல்லோரும் சமமாக போற்றப்படாத காரணத்தினால் தான் 2015 இல் ஜனவரி மாதம் அரசாங்கம் எமது கைகளுக்கு கிடைத்தது. எனவே தொடரப்பட்டு வருகின்ற பல பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்புக்கள் எமக்கு ஏற்பட்டது. அதனை நாம் நிறைவேற்றி வருகின்றோம்.

எமக்கு பின்னர் சுதந்திரமடைந்த எத்தனையோ நாடுகள் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள். சர்வதேச மனித உரிமை குழுவின் செயற்திட்டத்தினை நாம் செயற்படுத்தும் போது எமது அரசின் மக்களின் படைவீரர்களின் கௌரவத்தினை எந்தவகையிலும் பாதிக்காத வகையிலே நாம் செயற்படவுள்ளோம். இது தொடர்பாக இன்று சில அரசியல்வாதிகள் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முனைகிறார்கள். மக்கள் சேவகனாக இன்று உங்கள் முன்னிலையில் பேசும் நான், அனைவருடனும் ஒன்றிணைந்து நாட்டை பாதுகாப்போம், மக்களை பாதுகாப்போம், நாட்டின் சுதந்திரத்தினை பாதுகாப்போம், நாட்டினை முன்னேறச் செய்வோம். மக்களின் கௌரவம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் செயற்படுவோம். அபிமானமுள்ள நாடாக உலக நாடுகள் மத்தியில் சிந்த பெயரை பெற வேண்டிய நாடாக நமது நாட்டினை மாற்ற நாம் செயற்பட வேண்டும். கடந்த ஒரு வருடத்தில் ஜனநாயகத்தினை முழுமையாக பாதுகாக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் தற்போதய அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது.

அவ்வகையில் சுதந்திர ஆணைக்குழுக்களை ஏற்படுத்தியுள்ளோம். பாராளுமன்றத்தினை மேலும் பலப்படுத்தியுள்ளோம். இலஞ்சம் ஊழல் ஆகியவற்றினை இல்லாமல் செய்ய செயற்பட்டு வருகின்றோம். ஊடகத்துக்கு என்றுமில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. போஷாக்கு நிறைந்த சந்ததியினர் உருவாக்கப்படல் வேண்டும். உணவுற்பத்தி கைத்தொழில் உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். எமது நாட்டைச் சுற்றியுள்ள கடல் வளத்தினை முழுமையாக பயன்படுத்த வேண்டும். எமது மக்களை தேசிய வீரர்களை தேசிய பிதாக்களை நினைவுகூர வேண்டும். குறுகிய கால அரசியல் நோக்கங்களுக்காக செயற்படாமல் ஒன்றுபட்டு செயற்பட்டு அனைவரும் சகோதரர்களாக நல்லிணக்கத்தோடு செயற்படுவோம். எதிர்வரும் தசாப்தங்களில் உலகில் சிறந்த நாடாக நமது நாடு விளங்க ஒன்றுபட்டு செயற்படுவோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரையினை தொடர்ந்து அவரை கௌரவிக்கும் பொருட்டு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தின நிகழ்வு இனிதே நிறைவடைந்தமை விசேட அம்சமாகும்.

Related Posts