அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு, 150 வீடுகள் அழிப்பு 2450 பேர் இடம்பெயர்வு 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல், 1000 பேர் தொழில் வாய்ப்பு இழப்பு 272 கால்நடைகள் கொலை, 86 கொள்ளைச் சம்பங்களும் பதிவு
அளுத்கமையில் இடம் பெற்ற அசம்பாவித செயற்பாடுகளில் இதுவரை தமிழர் ஒருவர் உட்பட 8பேர் மரணித்துள்ளனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தால் 580 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது என நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான மொஹமட் அஸ்லம் மேற்படி சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் அரசாங்கம் நட்ட ஈட்டினை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வரினால் கொண்டுவரப்பட்ட 2013 ஆண்டுக்கான நிதி திட்டமிடல் அமைச்சின் அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களையும் கண்டனத்தையும் வெளியிட்டார்.
அஸ்லம் எம்.பி.இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
அளுத்கமையில் இடம் பெற்ற அசாம்பாவித சம்பவம் தொடர்பில் நாம் எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த சம்பவம் ஆனது கண்டனத்துக்கு உரியதாகும். சமாதானத்தை பாதுகாக்கும் பொலிஸார் உரிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார்களேயானால் இத்தகைய அழிவுகளும் இழப்புக்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திருக்க முடியும்.
ஆனால் அங்கு அவ்வாறு இடம் பெறவில்லை. இச் சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை மேலும் நான்கு பேர் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியால் மாரடைத்து மரணமாகினர். இதன்படி இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். அது மாத்திரமல்லாது 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தால் 580 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வர்த்தக நிலையங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் தமது அனைத்து உடைமைகளையும் அது மாத்திரம் அன்றி 272 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இங்கு 86 கொள்ளைச் சம்பங்களும் நடந்தேரியுள்ளன.
தர்கா நகரை கொண்டுள்ள நான் அங்குள்ள சிங்கள மக்களை நன்கு அறிவேன். அவர்களுடன் முஸ்லிம்கள் சகஜமாகவே வாழ்ந்து வருகின்றனர். எனினும் சம்பவம் தினத்தன்று புறபகுதிகளில் இருந்து வந்தவர்களாலேயே இந்த அசாம்பாவித சம்பங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஆகவே இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய வகையிலான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எமது பிரதேசத்துக்கு ஜனாதிபதி நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தமை தொடர்பில் எமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதா சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நடந்தேறியுள்ள சம்பவமானது மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது. இச்சம்பவத்தின் காரணரான பொதுபலசேனாவே பொதுச் செயலாளரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்களுக்குள் முடிவுக்கட்டப்பட வேண்டும் என்றும் இந்த இடத்திலே கோரிக்கை வைக்கின்றேன்.
ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் பாகிஸ்தானில் பிறக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எம்மை ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை. நாம் இலங்கையர் என்று கூறி கொள்வதில் பெருமை அடைகின்றோம். அதுமாத்திரம் அன்றி சிங்களவர்களில் பெருபான்மையானோர் இவ்வாறான குறுகிய சிந்தனையை கொண்டிருக்கவும் இல்லை. தாக்குதலை நடத்தவும் இல்லை. ஆனால் சிங்களவர்களில் மிக சிறுதொகையினரே இப்படி செயற்படுகின்றனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாதுகாப்பு தரப்பினரே அளுத்கமை தாக்குதலுக்கு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். ஆகவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.