அளுத்கம – பேருவளை வன்முறை சம்பவத்தை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக, கைது செய்யுமாறு அரசை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் சமூகப்பற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்தோடு இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடியை தொங்கவிடுமாறும் வேண்டப்பட்டுள்ளதுடன் நல்லாட்சியை விரும்பும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோரியுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர் அறிவுறுத்தும் சந்திப்பொன்று நேற்று கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற போதே இவ்வமைப்பினர் இவ்வாறு தெரிவித்தனர்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி. அர்ஷாட், மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி, நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மற்றும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அளுத்கமவில் ஏற்பட்ட கலவரமானது அப்பிரதேச சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட கலவரமல்ல. இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும்.
இத்தகைய கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் முடியவில்லை. இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே பொறுப்பு கூற வேண்டும்.தற்போது ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லை. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அமைதி காத்து வருவதுடன் இனிமேல் இத்தகைய அசம்பாவிதம் இடம்பெறாது என நேற்று முன்தினம் மாலை குறிப்பிட்ட போதும் அத்தினத்தன்று இரவு வெலிப்பன்னை பிரதேச வாழ் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியுள்ளனர்.
எனவே, பாதுகாப்பு படையினரின் விட்டுக்கொடுப்புக்கு பின்னால் பாதுகாப்பு செயலாளரே இருக்கிறார். பொது பல சேனா அதிகார வலுமிக்க அமைப்பாகும். எனவே இந்த ஹர்த்தாலுக்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
இங்கு முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்: அளுத்கம அசம்பாவிதம் தற்போது நாடு பூராகவும் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. இந்த பிரச்சினைதொடர்பில் அரசு கண்டு கொள்ளாமல் செயற்படுகின்றது. இது வரையில் 60இற்கு மேற்பட்ட வீடுகள் தீயிடப்பட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்த நிலையில் வாழ்கின்றனர். கோடிக்கணக்கில் முஸ்லிம்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
எனவே இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு பூரண கர்த்தாவாக இருந்து செயற்பட்ட பாதுகாப்பு செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும். அத்தோடு பொதுபல சேனாவின் இத்தகையசெயற்பாட்டிற்கு தொடர்ந்தும் ஒட்சிசன் வழங்கும் செயலிலேயே இனவாத அரசுகளமிறங்கியுள்ளது. எனவே அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் இந்த ஹர்த்தாலுக்கு சமூகப்பற்றுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இந்த போராட்டத்திற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடின் மிகவும் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்என்றார்.
இங்கு உரையாற்றிய தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி குறிப்பிடுகையில் தற்போது இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருப்பதானது சந்தேகத்துக்குரிய விடயமாகும். அளுத்கம கலவரமானது திட்டமிட்ட வகையில் செய்த செயலாகும் என்றார்.
இது வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் வன்முறை செயற்பாடுகள் குறைந்தபாடில்லை. முஸ்லிம்கள் அனைவரையும் வீட்டில் பூட்டியே இந்த அராஜகம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பெயரா ஊரடங்கு சட்டம்.
என்னுடன் தொடர்பு கொண்டு அப்பிரதேச மக்கள் கண்ணீர் விட்டு அழுகின்றனர். இதன் காரணமாக எங்களுக்கு கண்ணீர் வடிகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததாக பெருமைக் கொள்ளும் அரசிற்கு அளுத்கம என்ற சிறிய பிரதேசத்தை பாதுகாக்க முடியாது போய்விட்டது.
இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவருமே பதவி விலக வேண்டும். சமூகத் தலைவர்கள் அழிவுக்குட்படுத்தும் அரசிலிருந்து பயனில்லை என்றார்.
இத்தகைய சம்பவமானது மக்களின் பிரச்சினையை மூடி மறைக்கும் செயலாகும். இதனை முன்னிட்டு பொதுபல சேனாவை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றார்.