வலி. வடக்கு மக்கள் தமக்கு சொந்தமான நிலத்தையே கேட்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம். 6 மாதங்களுக்குள் சொந்த நிலங்களில் குடியமர்த்துவேன் என நான் உறுதியளித்தேன். 3 மாதங்களில் ஒரு தொகுதி நிலத்தை விடுவித்துள்ளேன். மீதமிருக்கும் 3 மாதங்களில் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். இவ்வாறு உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
நேற்று சனிக்கிழமை வலி. வடக்கில் ஒரு தொகுதி காணியையும் நடேஸ்வரக் கல்லூரியையும் மீண்டும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நடேஸ்வரக் கல்லூரி வளாகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றியபோது தெரிவித்தவை வருமாறு:-
உங்களின் காணிகளை மீண்டும் உங்களிடமே வழங்கவும், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் அமைக்கும் வீட்டுத் திட்டத்தை பார்வையிடவுமே இன்று நான் யாழ்ப்பாணத்துக்கு வந்தேன்.
வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் நீண்டகாலமாக யுத்தக் கொடுமையை அனுபவித்தவர்கள். உயிரிழப்புகளுக்கு சமமாக வறுமையும் இங்கு அதிகரித்துள்ளது. இவற்றை சீர் செய்ய நாம் கடுமையாக உழைக்கிறோம். இன்று நான் சந்தித்த மக்கள் தங்கள் நிலத்தைத் தமக்குத் தருமாறு கோரினர். அவர்கள் மற்றவர்களின் நிலங்களைக் கேட்கவில்லை. தமக்குச் சொந்தமானதேயே அவர்கள் கேட்கிறார்கள்.
இதற்குப் பொறுப்பான நாம் நிச்சயம் அதனை நிறைவேற்றுவோம். நத்தார் தினத்தில் நான் யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அப்போது அவர்களுக்கு நான் உறுதியளித்தேன். 6 மாதங்களுக்குள் அவர்களின் நிலத்தில் குடியேற்றுவேன் என்பதே அது. இப்போது 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டேன். இன்னமும் 3 மாதங்கள் உள்ளன. எனது வாக்குறதியை நிச்சயம் நிறைவேற்றுவன்.
உங்கள் நிலத்தை உங்களிடமே வழங்க, தென்னிலங்கையில் சிலர் கூச்சலிடுகின்றனர். ஆனால் நாம் விமர்சனங்கள், எதிர்ப்புக்களுக்கு அஞ்சவில்லை – என்றார்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள்மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.