அளவெட்டி கிணற்றிலும் எண்ணெய் கசிவு

சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது அளவெட்டிக்கும் பரவியுள்ளது. அளவெட்டி மேற்கில் ஜே – 218 கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிணறு ஒன்றிலும் எண்ணெய் கசிந்துள்ளதாக வீட்டு உரிமையாளர், கிராமஅலுவலர் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு தென்பட்டது.

அருகிலிருந்து கிணறுகளுக்கு ஏற்பட்ட எண்ணெய் கசிவுகள் தற்போது, மின் பிறப்பாக்கி அமைந்துள்ள வளாகத்தை சூழவுள்ள 5 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவியுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நோர்தன் பவர் நிறுவனம் மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்து அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த எண்ணெய் கசிவானது, மல்லாகம், ஏழாலை, கட்டுவன் ஆகிய பகுதிகளுக்கும் படிப்படியாக பரவிய நிலையில், தற்போது அளவெட்டியையும் பாதித்துள்ளது.

வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இவ்விடயம் யாழ். மாவட்ட செயலாளருக்கும், தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.

Related Posts