தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி என்றும் அவ்வியக்கத்தை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் போராளி இல்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, தெரிவித்தார்.
மேற்படி நபர், மல்லாகம் மாவமட்ட நீதிமன்றத்தினால் செவ்வாய்க்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
முன்னாள் போராளி ஒருவர் புனர்வாழ்வு பெறாமல் தங்கியுள்ளார் எனவும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பின் பேரிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கைதானவர் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை எனவும் அவரிடம் இரண்டு வெவ்வேறு முகவரியிடப்பட்ட அடையாள அட்டைகள் இருந்தமையும் தெரியவந்தது. அத்துடன், அவரது இரு சகோதரர்களே புலிகள் அமைப்பில் இருந்துள்ளனர் என்றும் அவர்களும் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.