அல்வாய் காணி இராணுவத்தினரால் சுவீகரிப்பு – சுகிர்தன்

வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (28) நில அளவையாளர் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.

vadama

ஜே – 400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அறிந்ததினையடுத்து, தானும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வி.சிவயோகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று காணி அளவிடுவதினைத் தடுத்து நிறுத்த முயன்றோம்.

எனினும் இராணுவத்தினர் எங்களை உள்ளே நுழைய விடாமல் இராணுவ வாகனங்களைக் குறுக்காக விட்டிருந்ததுடன், காணிகள் சுவீகரிப்பதற்கான அளவீடுகளையும் மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த காணிகளுக்குச் சொந்தமான குடும்பங்கள் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் என்பதுடன், அவர்கள் இந்தக் காணிகளை இழந்தால் அவர்களிடம் மீதமாக எதுவுமே இருக்காது எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts