அல்லா’ வழக்கு:கிறித்தவர்கள் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க ‘அல்லா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

malaysia_protestor_allah

இது தொடர்பாக நாட்டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4- 3 என்ற வாக்குகளில் நிராகரத்து தள்ளுபடி செய்தனர்.

மலேசியாவில் 2007லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத்தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, ‘ஹெரால்ட்’ இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதல் நீதிமன்றத்தில் கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால் அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தனர்.

ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச்சையை அடுத்து, அரசால் இந்தப் பதத்தை கிறித்தவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்கலது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டுகளாகவே தாங்கள் பயன்படுத்திவருவதாகக் கிறித்தவர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர்களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த வார்த்தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம்களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது.

இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக, ஹெரால் பத்திரிகையின் ஆசிரியர் அருட்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடிவடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறினார்.

ஆனால் இந்தத் தீர்ப்பை மறு பரீசலனை செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன.

Related Posts