அலரிமாளிகையில் இருந்ததாக கூறப்படும் போனி எனப்படும் சிறிய இன குதிரைகள் நான்கு, கோழிகள் மற்றும் ஒரு தொகுதி கோழிக்குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்துக்கு பொறுப்பாகவிருந்த நபரிடமிருந்தே மேற்குறிப்பிட்ட குதிரைகள், கோழிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை 80ஆயிரம் ரூபாவுக்கு தாம் பெற்றதாக பிலியந்தலையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் பணியாற்றிய மாலபேயைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த மிருகங்களை வாகனத்துடன் கொண்டுச்சென்று கொடுத்ததாகவும் அந்த வர்த்தகர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த வாகனம் பண்ணைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று ஏக்கர் கொண்ட காட்டுப்பகுதியில் வெள்ளைநிற போனிகள் இரண்டு மற்றும் மண்ணிற போனிகள் இரண்டும் இருந்ததாகவும் அவற்றை பார்த்துக்கொள்வதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் இருந்ததாகவும் தெரியவருகின்றது.
மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்கவுக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே பொலிஸாருடன் அவர் அந்த பண்ணைக்கு சென்றுள்ளார். அதன்போதே அந்த மிருகங்களின் உரிமையாளரான வர்த்தகர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.