ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையின் அறிக்கைக்கு, இலங்கை தனது பதிலை வழங்கியுள்ளது. அவ்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குப் போதிய கவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இது தொடர்பில் மேலதிகக் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்:
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது அறிக்கையையும் உயர்ஸ்தானிகரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்திலெடுக்கிறது.
ஜனவரி 8, 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்குத் தொடர்பான மனித எரிமைகள், சட்டத்தின் ஆட்சி, ஆட்சி, நீதி, நிறுவன மற்றும் சட்டச் சீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான உயர்ஸ்தானிகரின் அங்கிகரிப்புக் குறித்து மகிழ்ச்சியடைவதோடு, ஊக்கமடைகிறது.
நல்லிணக்கத்தை அடைவதில் தாக்கம் செலுத்துகின்ற முரண்பாட்டுக்குப் பின்னரான விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருடனும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடனும் அரசாங்கத்தின் பயன்தரக்கூடிய தொடர்பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள பொருத்தமான அங்கிகாரத்தை வரவேற்கிறது.
நாட்டு மக்களால், இந்நாட்டில் இருமுறை வழங்கப்பட்டிருக்கும் ஆணைக்கமைவாக, முரண்பாடு மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்வதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான முடிவில் உறுதியாக இருக்கிறது.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக நல்லிணக்கத்தையும் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தையும் ஏற்படுத்தும் நோக்கில், அறிவதற்கான உரிமை, நீதிக்கான உரிமை, நிவாரணம், மீள இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்துதல்
ஆகியவற்றுக்கான பொறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஏற்படுத்துவதற்காக, முரண்பாட்டில் பாதிக்கப்பட்மோர், சமூகங்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இராணுவம், அதேபோல் உயர்ஸ்தானிகர், அவரது அலுவலகம், இருதரப்பு இணைப்பாளர்கள், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் ஆகியவை உட்பட அனைத்துப் பங்குதாரர்களுடனும், கலந்துரையாடல்களையும் விரிவான ஆலோசனைகளையும் நடத்துவதை உறுதிப்படுத்துதல்.
இலங்கை மீதான விசாரணை அறிக்கைகயையும் இலங்கை கவனத்திலெடுப்பதோடு, இவ்வறிக்கையானது ஒரு மனித உரிமைகள் விசாரணையே தவிர, குற்றவியல் விசாரணையல்ல என்பதையும் உணர்கிறது. இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளவையும் பரிந்துரைகளும் பொருத்தமான அதிகாரிகளால் போதிய கவனம் வழங்கப்படும்.
நாட்டுப் பிரஜைகளினது மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும், உயர்ஸ்தானிகருடனும் அவரது அலுவலகத்துடனும் அதேபோல் மனித உரிமைகள் சபையின் கட்டமைப்புகளுடனும் நடைமுறைகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தயாராக இருக்கிறது.