யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அளித்த முறைப்பாடு தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்,
யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு இந்த விசாரணைகள் தொடர்பில் முதல் தகவல் அறிக்கை ( பீ அறிக்கை) சமர்ப்பிக்கவும் யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (9) முற்பகல் யாழ். பொலிஸ் நிலையம் சென்றுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்திய மூர்த்தி, நேற்றைய தினம் (08_) காலை வேளையில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் அலுவலகத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அத்துமீறி நுழைந்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக’ முறைப்பாடளித்துள்ளார்.
வைத்தியசாலையின் ஊழியர்களை மையப்படுத்திய நிர்வாக நடவடிக்கை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. தகவல்களை கோரிய போது அவற்றை வழங்க பணிப்பாளர் மறுத்துள்ள நிலையிலேயே, அவரை திட்டி இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஏ. தனபாலவின் உத்தரவில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயமஹவின் நேரடி கட்டுப்பாட்டில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவின் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.