அரைசதம் இல்லாத டெஸ்ட்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நேற்று தொடர்ந்து ஆடினர். சுழல் ஜாலத்தின் ‘கிடுக்குபிடி’ கொடிகட்டி பறந்த இந்த டெஸ்டில், ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை.

இந்தியாவின் முதலாவது இன்னிங்சில் முரளிவிஜய் எடுத்த 40 ரன்களே அதிகபட்சமாகும். 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்த ஒரு டெஸ்டில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காதது டெஸ்ட் சரித்திரத்தில் இது 7-வது நிகழ்வாகும்.

அதே சமயம் 4 இன்னிங்ஸ்களும் முழுமை பெற்ற இந்த டெஸ்டில் ஒருவர் கூட அரைசதம் அடிக்காதது இந்திய மண்ணில் இதுவே முதல்தடவையாகும்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது இந்தியா.

நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 215 ரன் எடுத்தது. அதிகபட்சமாக விஜய் 40 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் அபாரமாக பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது முதல் இன்னிங்சில் 79 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பின் 136 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியும் திணறியது. இந்தியா 173 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிக பட்சமாக தவான் 39 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் 5 விக்கெட் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு 310 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அம்லா, டுபிளசிஸ் மட்டும் இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஆடினார்கள். இருவரும் மிகவும் நிதானத்துடனும், கவனத்துடனும் விளையாடினர். நன்கு சுழன்று திரும்பிய பந்தை பொறுமையாக கையாண்டனர். ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் அமித் மிஸ்ரா அடுத்தடுத்து வீத்தியதும் தென் ஆப்ரிக்காவின் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட் ஆனார்கள்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அம்லா மற்றும் டுபிளசிஸ் இருவரும் 39 ரன்கள் குவித்தார்கள். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்களை வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசி போட்டி வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Posts