‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’

பாடசாலைகளில் உள்ள நெருக்கடிக்கு தீர்வாக ‘அருகிலுள்ள பாடசாலை… சிறந்த பாடசாலை’ என்ற தொனிப்பொருளில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பிரபல பாடசாலைகளுக்குள்ள பௌதீக மற்றும் ஆளணி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயத்தை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பிரசாரம் செய்யப்படுகிறது அது உண்மையல்ல. மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயத்திலுள்ள கேட்போர்கூடம் மற்றும் இருமாடி கட்டிடம் என்பற்றை நிர்மாணிப்பதற்கான நிதி கிடைத்தவுடன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படும். விளையாட்டு மைதானம் தவிர்ந்த ஏனைய அனைத்தையும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுதி கட்டிடத்தை அடுத்த வருடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த வருடம் ஆரம்பித்த திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து எவ்வாறு? எப்படி? நிதி ஒதுக்குவது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். புலமை பரிசில் வகுப்புக்களுக்கும், முதலாம் வகுப்புக்கும் எந்த பிள்ளையையும் எடுக்க முன்மொழியப்படவில்லை. புலமை பரிசில் புள்ளிகளுக்கமையவே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நான் கல்வியமைச்சராக இருந்த போதிலும் எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க முயற்சித்ததில்லை. கல்வி அமைச்சின் நிதி சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாத தன்மை கடந்த காலங்களில் காணப்பட்டது. சில பாடசாலைகளுக்கு ஐந்து சதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.

அருகிலுள்ள பாடசாலை … சிறந்த பாடசாலை திட்டத்தினூடாக அனைத்து பாடசாலைகளுக்கும் சமமான வளப்பகிர்வை மேற்கொள்ளும் ​நோக்கில் உருவாக்கப்பட்டது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts