யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை, நேற்று (வியாழக்கிழமை) மீள நடைபெற்றதோடு சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத போதும், விசாரணைகள் தொடர்வதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மன்றில் அறிவித்தனர். இதனை கருத்திற்கொண்ட நீதவான் எஸ்.சதீஸ்தரன், சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலை – மணியந்தோட்டம் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி 24 வயதுடைய டொன் பொஸ்கோ என்ற இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது பதிவான சீ.சீ.ரி.வி. காணொளியில் காணப்பட்ட வாகனங்கள், யாழ். பண்ணை பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையின் முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 3ஆம் திகதி விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.