பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதி தீர்வை 35 ரூபாவிலிருந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் விதத்தில் அரிசி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
2015/2016 பெரும்போகத்தில் கிடைக்கவிருக்கும் உள்நாட்டு நெல் உற்பத்தியைக் கவனத்திலெடுத்து உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி அதிகரிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வருமானப் பாதுகாப்புச் சட்டத்தின் கீ்ழ் வெளியிடப்பட்ட பெப்ரவரி முதலாம் திகதி 1952/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.