அரவிந்த்சாமி என் மீது கோபமாக உள்ளார்: மணிரத்னம்

நடிகர் அரவிந்த்சாமி தன் மீது கோபமாக இருப்பதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் நடிகர் ஆனவர் அரவிந்த்சாமி. மணிரத்னத்தின் ரோஜா படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.

சில காலம் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த அரவிந்த் சாமி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக அசத்தல் வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

மணியின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர் அரவிந்த்சாமி. அப்படி இருக்கும்போது அவர் நடித்த தனி ஒருவன் படத்தை இன்னும் மணி பார்க்கவில்லையாம்.

தனி ஒருவன் ரிலீஸான போது அதை தியேட்டரில் பார்க்க முடியவில்லை. இதனால் அரவிந்த் சாமி இன்னும் என் மீது கோபமாக உள்ளார். சரியான நேரம் வரும்போது விரைவில் டிவிடியில் பார்க்க வேண்டும் என்கிறார் மணிரத்னம்.

கார்த்தி, அதிதி ராவ் ஹைதரியை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து தளபதி போன்று கேங்ஸ்டர் படத்தை இயக்குவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் மணி.

Related Posts