அரச வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தம்

அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் திருத்தம் செய்யப்படாமை, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையுடனான வாகன அனுமதிப் பத்திர முறை இரத்துச் செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் நல்ல பதில் கிடைக்காவிடில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் அறிவித்தது.

இந்தநிலையில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், நேற்று நள்ளிரவு அளவில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நலிந்த ஹேரத் வௌியிட்டுள்ள அறிக்கையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு சலுகையையும் இரத்துச் செய்யக் கூடாது எனக் கோரிக்கை விடுப்பதாகவும், ஏற்காவிடில் அதனை எதிர்க்க எமது சங்கத்தின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி 2015ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள எமது சங்கம் தீர்மானித்துள்ளது, எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Posts