அரச வேட்பாளரிற்கு வாக்களிக்க உத்தியோகத்தர்களை நிர்ப்பந்தித்த பிரதேச செயலாளர்!!

நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் அரச கட்சி வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி உத்தியோகத்தர்களை வற்புறுத்திய பிரதேச செயலாளர் குறித்து முறையிட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகிறது.

யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் ஒருவரே இந்த தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் அரச கட்சி என்றுமில்லாத வகையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. மாவட்ட அரச அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பது தெரிய வந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் உத்தரவில் விசேட விசாரணையொன்றே நடைபெற்றுமுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், சில பிரதேச செயலக மட்டங்களிலும் விதி மீறல்கள் நடந்து வருகின்றன.

இதன்படி, பிரதேச செயலாளர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பில் அரச கட்சி வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது குறித்து பல உத்தியோகத்தர்களின் தகவலின் பேரில், பிரதேச செயலாளர் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தயாராகி வருகிறது. ஓரிரு நாளில் முறைப்பாடு பதிவாகுமேன தெரிகிறது.

இதேவேளை, அந்த பிரதேச செயலாளர் வேறும் பல விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களில் புனரமைக்கப்பட்ட வீதிகளை, அங்கஜன் இராமாதன் திறந்து வைத்து வந்ததுடன், அவை தம்மால் புனரமைக்கப்பட்டதாக தெரிவித்து வந்தார். அவை தவறான தகவல் என்பதுடன், தேர்தல் விதிமீறலுமாகும்.

அவரது பிரதேச செயலக பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கையெடுப்பதையும் அந்த பிரதேச செயலாளர் தாமதப்படுத்தி வந்ததாகவும், கூட்டமைப்பின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்படவுள்ளது.

Related Posts