அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று காலை வழங்கப்படவுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவான நியமனத்திற்கு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரச ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.கமகே தெரிவித்தார்.
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 3.000 இணைத்துக் கொள்வதற்காக தற்பொழுது மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கபொத உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்கள் சித்தியுடன் கணிதம், சிங்களம் அல்லது தமிழ் மொழி உள்ளிட்ட நான்கு பாடங்களில் திறமை சித்திகளுடன் கபொத சாதாரண பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
இந்தப் பரீட்சையில் சித்தியடைவோர் வெற்றிடங்களுக்கு அமைவாக மேலும் மூவாயிரம் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் திருமதி கமகே தெரிவித்தார்.