அரச பஸ்ஸின் சாரதி மதுபோதையில்!!! ; படையினர், பொலிஸாரின் சோதனையில் சிக்கினார்!!

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பபாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து பேருந்தை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கையை 512ஆவது படைத்தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் நாவற்குழியில் நேற்று இரவு முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரும் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட முற்பட்ட போது, சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது. சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் சாரயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.

சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

46 பயணிகளும் அக்கரைப்பற்றுக்கு பயணிப்பதற்கு கோண்டாவில் சாலையைச் சேர்ந்த மற்றொரு பேருந்தை அனுப்பிவைக்குமாறு பொலிஸார் அறிவித்தனர்.

மக்களின் பாதுகாப்புக் கருதியே இந்தப் பேருந்தை தடுத்துவைத்துவிட்டு மற்றொரு பேருந்தை வரவழைத்துள்ளோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

46 பயணிகளும் அக்கரைப்பற்றுக்கு பயணிப்பதற்கு கோண்டாவில் சாலையிலிருந்து வரவழைக்கப்படட மற்றொரு பேருந்து இரவு 9 மணியளவில் நாவற்குழியிலிருந்து புறப்பட்டது.

Related Posts