அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும் அவற்றுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடாதிபதிகள் இதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ள போதிலும், இன்னும் 1700 மாணவர்களுக்கு மேற்படி துறைகளுக்கு அனுமதி வழங்க முடியும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, அரச பல்கலைக்கழகங்களுக்கு அடிக்கடி மாணவர் அனுமதிக்கப்படுவதற்கு விண்ணப்பம் கோரும் முறைமையை நீக்குமாறு விஞ்ஞான பீட பீடாதிபதிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை கோரியுள்ளனர்.
இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதில், விஞ்ஞான பீட பீடாதிபதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.