அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கான “மஹாபொல” கட்டுப்பாட்டில் தளர்வு

அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகள் மஹாபொல புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள வசதியாக மூன்று இலட்சம் வருமானம் என்ற கட்டுப்பாட்டை ஆறு இலட்சமாக அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு உத்தேசித்துள்ளது.

தற்போது அரசாங்க ஊழியர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபாவை வருடாந்த வருமானமாக பெறுவாராயின் அவரது பிள்ளை மஹாபொல புலமைப் பரிசிலைப் பெறும் தகுதியை இழக்கின்றார். இந்த மூன்று இலட்சம் என்ற கட்டுப்பாட்டை ஆறு இலட்சமாக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா தெரிவித்தார்.

அதேவேளை தற்போது 12,000 பேருக்கே வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசிலை 16,000 பேராக அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றி்ல் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த ஆணைக்குழுவின் தலைவர்..

அரச ஊழியர் ஒருவர் வருடாந்த வருமானமாக மூன்று இலட்சம் ரூபாவைப் இபற்றுக் கொள்வாராயின் அவரது பிள்ளை மஹாபொல புலமைப்பரிசில் பெறும் தகுதியை இழக்கின்றது. இதுவே தற்போதுள்ள நடைமுறை இதனால் எமது அரசாங்க ஊழியர்கள் இந்த சலுகையை இழக்க நேரிடுகிறது. இதனைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் முற்றாக நிராகரிக்கிறது.

இதனைக் கருத்திற்கொண்டு ஆணைக்குழு மூன்று இலட்சம் என்ற தொகையை ஆறு இலட்சமாக அதிகரிக்கும் ஆலோசனையை முன் வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது 12,000 மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசில் பெறுகின்றனர். இந்த மாணவர் தொகையையும் 16,000 மாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மஹாபொல புலமைப்பரிசிலின் 50 வீதத்தை மஹாபொல நிதியமும் மீதம் 50 வீதத்தை திறைசேரியும் தற்போது வழங்கி வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கும் பாரிய பொறுப்புகள் உள்ளதைக் குறிப்பி்டவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts