அரச அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், சக அலுவலர்களுடன் சதா பேசிக் கொண்டிருப்பதையும் வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதையும் ஒரு பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடற்று கடமைகளை மறந்து பணிகளில் ஈடுபடுவதைப் பழகிக் கொள்ளாதீர்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (07) தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
சிறிது சிறிதாக எமது வட மாகாணம் மலர்ச்சி பெற்று வருகின்றது என்பதற்கு இன்றைய தினம் ஒரு உதாரணம். வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, நேர்மையான நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கி எமது மாகாணம் முன்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.
பலர் அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். அது தவறு. இன்று அரசாங்கம் ஒன்று ஒரு நாட்டில் தனித்து இயங்குவது என்பது கடினமானது. தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் என பலவும் அரசாங்கங்களுக்கு ஒத்திசைவாக நடந்து சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.
எனவே, எமது இளைஞர், யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும். தன்னம்பிக்கையுடன் தொழில் முயற்சியாளராக மாற முன்வர வேண்டும்.
சுமார் 40, 50 வருடங்களுக்கு முன் அனைத்து நியமனங்களும் மத்திய அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் வர்த்தமானி மூலமாக விண்ணப்பங்கள் கோரப்படும். தகுதியான விண்ணப்பதாரிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்கள். அதன் பின் போட்டிப் பரீட்சை நடைபெறும். அப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதில், தேர்வானவர்களுக்கு நியமனத்தைப் பெறுவதற்கான கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும் படி தகவல் அனுப்பப்படும்.
நியமனக் கடிதத்தைப் பெறும் வரை எந்த இடத்துக்கு அனுப்பப்போகின்றார்கள் என்ற எந்தத் தகவலும் பெற்றுக் கொள்ள முடியாது.
நியமனக் கடிதம் வழங்கப்பட்டதும் அதில் களுத்துறை கச்சேரியில் கடமையைப் பொறுப்பேற்கவும் அல்லது நுவரெலியாவில் உள்ள ஒரு காரியாலயத்தில் பொறுப்பேற்கவும் அல்லது தங்காலைக்கு உடனே வந்து சேரவும் எனக் குறிப்பிட்டு இலங்கை முழுவதிலும் உள்ள பல பகுதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.
அதில் ஒருவர் அல்லது இருவர் வட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு அலுவலகத்துக்கு தெரிவாகிவிட்டால் அவர்கள் லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்றதற்கு ஒப்பான சந்தோசத்தில் இருப்பார்கள். தேர்வானவர்கள் எந்த மேன்முறையீடும் செய்ய முடியாது அல்லது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியாது.
இந்த நியமனங்கள் வழங்கப்படுவது அரச அலுவலகங்களில் உள்ள கடமைகளை முறையாகவும் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கேயாகும். அதைவிடுத்து உங்கள் பிரத்தியேகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல.
அரச அலுவலகங்களில் நியமனங்கள் பெற்றவுடன் தான் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதே நியமனங்கள் ஒரு பிரத்தியேக வங்கியிலோ அல்லது நிறுவனத்திலோ கிடைக்கப் பெற்றால் எந்தவித மறுப்பும் இன்றி உங்கள் கடமைகளை முழு நேரமும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நிமிடம் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிறையத் தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். எங்களை நாடி வருகின்ற பொது மக்கள் மீது எரிந்து விழாது அவர்களைப் பரிவுடன் அணுகி அவர்களின் தேவைகளை நிறைவு செய்யப் பழகுங்கள். சாதி, சமயம் பார்க்கப் போகாதீர்கள். அவர்கள் யாவரும் மனித இனத்தவரே என்பதை மனதில் நிறுத்தி கடமைகளில் ஈடுபடுங்கள். சட்டத்திற்கு அமைவாக வேலை செய்யப் பழகுங்கள் என்றார்.