அரச அதிகாரிகள் நியாயத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும் – டக்ளஸ்

அரச அதிகாரிகள் நியாயத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பணியாற்றும் அதேவேளை, கொள்கைத் திட்டங்களுக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதுதான், மக்கள் முழுமையான பலனைப் பெற்றுக் கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தித் திட்ட முன்னேற்பாடுகள் தொடர்பிலான மாவட்ட செயலாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விஷேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0dcc4

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த மாவட்ட அபிவிருத்தி திட்ட முன்னேற்பாடுகள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் பாதிக்காத வகையில் அமையப்பெற வேண்டும் என்பதை நான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன்.

படைத்தரப்பினர் வசமுள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் விபரங்களை, குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயம் உள்ளடங்கலான விடயங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் எனக்கு அறிக்கை சமர்ப்பியுங்கள்.

இதனிடையே, பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சில பாதிப்புகளுடன் காணப்படும் நிலையில், அவற்றைத் திருத்தியமைத்து வீடுகள் இல்லாதோருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணி இல்லாதோருக்கு அரச காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்குக் காணிக் கச்சேரிகளை வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், ஊர்காவற்துறை இறங்குதுறைப் பகுதியை துரிதமாக மீள்புனரமைப்புச் செய்யும் அதேவேளை, அப்பகுதியை அழகுற சீரமைப்பதுடன், ஏனைய வேலைகளும் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

வடமராட்சி கிழக்குக் கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் குழை போட்டுக் கணவாய் பிடிப்பது, கடலட்டை பிடிப்பது போன்ற தொழில் நடவடிக்கைகள் யாழ். மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை முற்றாக நிறுத்துவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன், யாழ். மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளின் கீழும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்திய வீட்டுத்திட்ட கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துதல் முக்கியமானதாகும்.

அரச அதிகாரிகள் நியாயத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் தமது பணிகளைச் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி, அரசின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் பணியாற்றும் போதே மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும்.

யாழ். சங்கிலியன் தோப்பு வளாகத்தை அழகுபடுத்தி அதனைச் சுற்றுலாத்தளமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனிடையே, யாழ்.மாவட்டத்தில் பனை மரங்கள் உள்ளிட்ட ஏனைய மரங்களைத் தறிக்கும் போது உரியவர்களிடம் அனுமதி பெறப்பட்டிருத்தல் அவசியமானது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் நியாயத் தன்மைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

நாம் இவ்விடயத்தில் சமூக அக்கறையுடன் இருக்கின்றேன். சங்கானையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான மரக்காலைக்கு மரங்கள் தறிக்கப்படுவதற்கான அனுமதியை உடனடியாகத் தடை செய்து அதற்குரிய உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உத்தேசிக்கப்பட்டுள்ள யாழ். புகையிரத நகர மயமாக்கல் திட்டம் தொடர்பாக அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி முன்னேற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டினர்.

Related Posts