அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசார நிகழ்வில் சகஜமாக ஜனாதிபதி கலந்துரையாடும்போதே இப்படி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
“நான் இந்த நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் உரித்தான ஜனாதிபதி. என்னுடைய பணி அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகையினால் எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் நான் காட்டமாட்டேன்.
உதவி, அபிவிருத்தி என்பன அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியே முன்னெடுக்கப்படும். ஆனால், அந்தந்த உதவிகள் உரியவர்களுக்கும் உரிய பிரதேசத்திற்கும் கிடைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்துடன் சுமூகமாக நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடந்துகொள்ளுமானால் அபிவிருத்தி, மேம்பாடுகள் வழமைபோல் சுமூகமாக நடைபெறும்” என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டதாக நம்பகரமான வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.