“மஹிந்த அரசின் அறிவிப்புக்கமைய தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரே அணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதில் நிச்சயம் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு மஹிந்த அரசைத் தோற்கடிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், தேசியத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மட்டுமே விடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இலங்கையில் தற்போது கொடூர காட்டாட்சி நடைபெறுகின்றது. எனவே, மாற்றத்தை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இந்தக் கொடூர – அநீதியான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. எமது கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலரும் எம்முடன் இணையவுள்ளனர். எத்தனை பேர் என்று இப்போதைக்கு கூறமாட்டோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.