“இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்” எனத் தலைப்பிடப்பட்டுக் குடாநாட்டு அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கையெழுத்து இடுமாறுகோரி அனுப்பப்பட்ட மகஜர் அவர்கள் கையெழுத்திடாத நிலையில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.ஜெனிவாவில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்துப் பெறும் மகஜரே அது எனத் தெரிந்துகொண்ட அரச அலுவலர்கள் பலரும் அதில் கையெழுத்து இடுவதைத் தவிர்த்தனர். இதனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
முக்கிய அரச அதிகாரிகள் எவரும் இந்த மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆயினும்
இந்து பௌத்த பேரவையைச் சேர்ந்த சுவிஸ் நாட்டிலிருந்து வந்துள்ளதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரே இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.கடந்த இரண்டு தினங்களாக சகல அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளுக்குப் பயணம் செய்த கையெழுத்துப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சில அரச திணைக்களங்களுக்கு அவர் சென்ற வேளை அங்கிருந்த அரச அதிகாரிகள் நாளை வருமாறு அவரிடம் கூறினர். ஆயினும் அவர் இன்று (நேற்று) மாலை 4 மணிக்கு முன்னர் கையொப்பம் பெற்று இதனை அனுப்ப வேண்டும் என்றார். எங்கு அனுப்ப வேண்டும் என்று அரச அதிகாரிகள் அவரிடம் கேட்டபோதே உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு இதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு ஆதரவாக கையொப்பம் இடுமாறும், இதில் வடமாகாண ஆளுநர் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் அதில் கையொப்பமிடுவதைத் தவிர்த்தனர். இதனால் அவரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரியவருகிறது.