அரசியல் சூழலுக்கு ஏற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்

‘மலையக மக்களின் நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், அரசியல் சூழலுக்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்திகொள்ளும் வகையில், அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘கடந்த 4 மாதங்களாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றேன். அரசியல் நலனுக்காக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்கின்றார்கள். கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த பெருந்தோட்டத்துறை அமைச்சை இல்லாமல் செய்துவிட்டனர்.

மலையக மக்களுக்கு தனி வீடுகள், 7 பேர்ச் காணி; கொடுக்கப்பட வேண்டுமென கூறுகின்றார்கள். ஆனால், இதுவரை எந்த நலனையும் பெற்றுகொள்ள முடியாதவர்களாக மலையக மக்கள் உள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழலில் யார் வெற்றிபெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, அது இரண்டாவது பட்சம். மலையக மக்களின் நலனில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கமைவாக, தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். இன்று திங்கட்கிழமை மாலை இதற்கான முடிவுகள் கிடைக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts