அரசியல் விளம்பரத்தில் நடித்து விட்டு அல்லாடும் கஸ்தூரி பாட்டி

சினிமாவில் ஹீரோயின் ஆகும் கனவோடு சென்னைக்கு வந்து, அந்த கனவு நிறைவேறாமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆனவர் கஸ்தூரி பாட்டி. கிராமத்து படம் என்றால் பஞ்சாயத்தில் கோபமாக பேசும் காட்சிக்கும், நகரத்து படம் என்றால் இட்லி விற்கும் பாட்டி வேடத்துக்கும் பொருத்தமானவராக அறியப்பட்டவர். 200 படத்திற்கு மேல் ஒரு காட்சி, இரு காட்சியில் நடித்துள்ளார். சில படங்களில் தனி கேரக்டராககவும் நடித்துள்ளார். வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் கஸ்தூரி பாட்டி தி.மு.க, அ.தி.முக இரண்டு கட்சி விளம்பரங்களிலும் நடித்து வைரலாகி இருக்கிறார்.

kasthoorey-party

“பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம் புரட்சி தலைவி அம்மாதான் என அதிமுக விளம்பரங்களில் உருகும் கஸ்தூரி பாட்டி, “வானத்துல பறக்குறவங்களுக்கு நம்ம பிரச்சினை எப்படித் தெரியும் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி எதுக்குங்க? போதும்மா… என்று அதே அம்மாவை பார்த்து கேள்வி கேட்கிறார். இரண்டு விளம்பரங்களையும் ஒரே விளம்பரமாக்கி தி.மு.க, அ.தி.மு.கவையும், கஸ்தூரி பாட்டியையும் கலாயத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

தி.மு.கவினர் “எங்கள் விளம்பரத்தில் தான் தெரிந்து நடித்தீர்கள், அ.தி.மு.க விளம்பரத்தில் தெரியாமல் நடித்து விட்டீர்கள் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்கிறார்களாம். “நான் அம்மாவின் கட்சி. அவர் விளம்ரத்தில்தான் நடித்தேன். குறும்படம் என்று நினைத்து தி.மு.க விளம்பரத்தில் நடித்துவிட்டேன் என்று சொல்ல சொல்லி அ.தி.மு.கவினரும் வற்புறுத்தி வருகிறார்களாம். இரண்டு பக்கமும் சாயமுடியாமல் தவித்து வருகிறார் பாட்டி. இத்தனைக்கும் அ.தி.மு.க விளம்பரத்தில் நடிக்க 1500 ரூபாயும், தி.மு.க விளம்பரத்தில் நடிக்க 1000 ரூபாயும் மட்டுமே சம்பளம் வாங்கி உள்ளார். கோடிக் கணக்கில் சொத்து வைத்திருக்கும் கட்சிகள் கொடுத்த சம்பளம் அவ்வளவுதான். கஸ்தூரி பாட்டிக்கு ஏற்பட்டுள்ள இந்த விநோத சிக்கலுக்கு நடிகர் சங்கம் தான் தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.

Related Posts