அரசியல் சாசனத்தை மீறினாரா விக்னேஸ்வரன்? மறுக்கிறது அரச தரப்பு

அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு நேற்று நாடாளுமன்றத்தில்நிராகரித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றம் கூடிய போது, இது குறித்து கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, அண்மையில் யாழ் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாணத்துக்குள் புதிதாக புத்த விகாரைகளை அமைக்க இடமளிக்கப்பட கூடாதென்றும், தற்போது இருக்கின்ற புத்தர் சிலைகள் நீக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்தக் கருத்துக்களின் மூலம் வடமாகாண முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய தினேஷ் குனவர்த்தன, இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆளும் கட்சியின் அமைப்பாளரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரிஎல்ல, இந்த கருத்துக்களை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே, இது குறித்து மேலும் விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை என்று கூறிய அமைச்சர் கிரிஎல்ல, இனவாதத்தை தூண்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் கூட்டு எதிர்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சரின் பதில்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய உறுப்பினர் தினேஷ் குனவர்த்தன, வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களை அரசாங்கம் கண்டிக்கின்றதா என்பதை பகிரங்கமாக கூற வேண்டுமென்று தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, இது குறித்து பிரதமர் எதிர் காலத்தில் விரிவான பதிலொன்றை வழங்குவாரென்று சபையில் அறிவித்தார்.

Related Posts