இன்று கொழும்புமாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.அதில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் உள்ள மூவின மக்களையும் ஒருங்கிணைத்து யாதி பேதங்களையும் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து தமிழர் விடுதலைக்கூட்டணி ஜனநாயக கட்சியோடு இணைந்து தலைநகர் கொழும்பில் களமிறங்கியுள்ளது நீங்கள் யாவரும் அறிந்த ஒன்று. நாம் வெறுமனே கடந்த கால அரசாங்கத்தையோ அல்லது ஏனைய கட்சிகளையோ விமர்சிப்பதை விடுத்து ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவையாக உள்ளது.
மக்களின் சிறந்த சுபீட்சமான எதிர்காலம் கருதி செயற்படுவதற்கு இளைஞர்களை உள்வாங்கி களத்தில் இறங்கியுள்ளோம். வெறுமனே விமர்சனங்களை செய்து கொண்டிருப்பதை விடுத்து நாட்டினையும் நாட்டு மக்களையும் அழிவு [பாதையில் இருந்து மீட்க ஜனநாயக ரீதியான எமது முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. தமிழ் மக்களுக்கு ஆதரவு தருவதற்காக களமிறங்கிய சிலர் இன்று பேரினவாத கட்சிகளோடு இணைந்து வாக்கு கேட்பது மன்னிக்க முடியாதது. இன்று கொழும்பில் தமிழர் விடுதலை கூட்டணியோடு ஜனநாயக கட்சி இணைந்திருப்பது ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பெற்ற அனுபவங்களையும் அரசியல் அறிவினையும் வைத்து தமக்கு வாக்களித்த மக்களிற்கு திருப்திகரமான சேவையினை வழங்க தவறி வருகின்றனர்.. அது மாத்திரமன்றி பாரம்பரிய அரசியல் அல்லது வியாபார அரசியலுக்காக மட்டுமே பெரும்பாலும் தேர்தலில் போட்டியிட விளைகின்றார்களே அன்றி மக்களுக்கு சேவை ஆற்றுவது நோக்கமாக அல்ல.
பொதுவாக அரசியல் வாதிகள் என்பது மக்களுக்கு சேவை ஆற்றுபவர்களே அன்றி மக்களிடம் சேவகம் பெறுபவர்கள் அல்ல என்பதை எமது மக்கள் மட்டும் அல்ல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் காலம் இதய சுத்தியுள்ள, கையில் இரத்த கறை படியாத நபர்களை பாராளுமன்றம் அனுப்புவதோடு மக்களின் விமோஷனதுக்காகவும் விடிவுக்காகவும் இளைய சமுதாயம் போராட வேண்டும் என்பது எமது அவா ஆகும்.
கடந்த காலத்தில் வெளியான அறிக்கையின் படி 50% க்கு அண்ணளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.தா. உ /த ஆவது சித்தியடையாதவர்கள் என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.. படித்த அல்லது உயர் கல்வி அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களாவது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதை உணர மறுக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்.
இனி வரும் இளைய சமுதாயம் அரசியலில் ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பது எனது அவா. அரசியல் என்பது சாக்கடை என்று அதை விட்டுவிட முடியாது. அதனை அப்படியே விட்டுவிட்டால் மக்கள் சாக்கடைக்குள் வாழ்வதை தவிர வேறு வழி இருக்க முடியாது. சாக்கடை சாக்கடை என்று எமது இளைய சமுதாயம் ஒதுங்குமேயானால் அதனை இறங்கி சுத்தபடுத்துவது யார்? அந்த கூலி தொழிலாளியாக நான் இருப்பதையே இன்றும் என்றும் விரும்புகின்றேன் என்றார்