ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது என தெரிவித்த வடக்கு முதலமைச்சர், அமைச்சர் தலதா அத்துகோரல கூறிய கருத்து தவறு என சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட குழுவினரை கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
“தலதா அத்துகோரல அமைச்சர் அவர்கள் அரசியல் கைதி என்று இலங்கையில் எவரும் இல்லை என்று சொல்லியிருக்கின்றார். அது தவறு. அரசியல் காரணத்திற்காக ஒரு பிரத்தியேகமான சட்டத்தின் கீழ் தான் அவர்களை நாங்கள் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கின்றோம். அல்லது அவர்களை கைது செய்திருக்கின்றோம்.
அந்த பிரத்தியேக சட்டத்தில் இருக்கின்ற அடிப்படையில், இவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டிருக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்க முடியாது.
அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்கள் உண்மையாக நடைபெற்றுள்ளனவா என வேறு தனிப்பட்ட சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அப்படி இல்லாமல் வெறுமனே ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அரசியல் கைதிகள் தான்.” என கூறினார்.