அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்றும் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக சில அரசியல் கைதிகளை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என்றும் வடக்கு முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பங்காளிகளாக செயற்பட்டிருந்தார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர் நாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நல்லிணக்கம் என பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை உனத் தெரிவித்த அவர் நல்லிணக்கத்தை அரசாங்கம் செயலில் காண்பிக்கவேண்டும் என்றும் கூறினார். தமழிர்களின் சுமூகமான வாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விடயங்களை அரசாங்கத்திற்கு கூறிக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் அரசாங்கம் அந்த முட்டுக்கட்டைகள் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.