அரசியல் கைதிகளின் விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறை மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறை என இரண்டு வழிமுறைகள் காணப்பட்டன.
இதில் எந்தமுறையூடாக பிரச்சினையை அணுகப் போகின்றோம் என்பதை தீர்மானித்து ஏதாவது ஒரு வழிமுறையூடாக கையாண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து இரண்டு வழிமுறைகளினூடாகவும் முயற்சித்து ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொண்டமை அரசியல் கைதிகளின் விடுதலை இன்னும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றமைக்கு முக்கிய காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், விடுதலை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் எதிர்காலத்திலாவது அரசியல் கைதிகள் விடயத்தினை கையாளுகின்ற தரப்புக்கள் சிறந்த பொறிமுறையூடாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.