‘சில மாதங்களுக்கு முன்னர் ஒருசில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல் கைதிகள் – புனர்வாழ்வுக்குச் செல்ல விரும்பவில்லை என்று ஜனாதிபதியிடம் கருத்துப்படத் தெரிவித்திருந்தனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. நாங்கள் எப்பொழுதும் புனர்வாழ்வுக்குத் தயாராக இருக்கின்றோம். போராட்டத்தில் சம்பந்தப்படாத ஒருசிலர் மாத்திரம், தமக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும் தாம் விடுதலை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இந்த உண்மை நிலைப்பாட்டினை உரிய இடத்துக்கு கொண்டுசெல்லுங்கள்’ என்று, விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு மகசின் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் 14 கைதிகளை புதன்கிழமையன்று (02), சந்தித்து கலந்துரையாடிய போதே டெனிஸ்வரனிடம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்களைச் சந்தித்துவிட்டு, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த டெனிஸ்வரன் மேலும் கூறியதாவது,
‘தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் பொருத்தமான நடவடிக்கைகளின் ஊடாக விரைவாகக் கையாளப்படவேண்டும். அவர்கள், விரைவாக குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டு, இயல்பு வாழ்வுக்கு திரும்புவது அவசியமானது. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள், போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் போராட்டத்தோடு தொடர்புபடாத பொதுமகன் என்ற அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு கையாளப்படுதல் வேண்டும்.
இதில் போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல் கைதிகள் பலர் கைதுசெய்யப்பட்டு 5, 10, 15, 20 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தற்போதைய அரசு பொதுமன்னிப்பு வழங்க முன்வரவில்லை என்பதும் நாம் எல்லோரும் அறிந்த விடயமாகும்.
அதேநேரம், சட்டத்தின் பிரகாரம் பிணையில் விடுவதென்பதும் முடியாத காரியமாக இருக்கின்றது.
ஆகவே, மேற்படி வகைப்படுத்தப்பட்ட கைதிகள், தங்களது குடும்பங்களோடு மீள இணையவேண்டுமெனில் புனர்வாழ்வு ஒன்றே தற்போது பொருத்தமானதும் அரசினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது. போராட்டத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு பொது மன்னிப்போ, புனர்வாழ்வோ அல்லது பிணையோ பொருத்தமற்ற ஒன்றாக காணப்படுகிறது. அத்துடன், இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாது வெலிக்கடை, அநுராதபுரம், வவுனியா ஆகிய சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகளில் நான்கு பெண்களையும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளேன். அவர்களின் மனநிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது 4 பெண்கள் உட்பட 168 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடவுள்ளேன். முடியுமானால் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகள், தமது உண்ணாவிரதத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் மேலும் கூறினார்.