அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை

அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே இவ்வாற தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணமாயிருந்தது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பலம் பொருந்திய கட்சி தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எந்தவித செயற்திறன் மிக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.வாக்குறுதிகளை வழங்கியபடி, தமது செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

ஏன் இந்த அரசாங்கத்திடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான, நிபந்தனைகளை விதிக்கவில்லை என அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது, விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரையில் கைதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்காது இருப்பது மிகுந்த வேதனை தருகின்றது.

பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டுமென அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நல்லாட்சி அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அடிப்படையில் பெரும் சவால் மிக்க பிரச்சினை.

எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை. மிக விரைவில், இறுக்கமான பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும், அதில், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும்.

அந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமான பேச்சுவார்த்ததையாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையுடன் இருக்குமாறும், உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Related Posts