அரசியல் கைதிகள் தொடர்பான பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடும்

அரசியல் கைதிகள் தொடர்பான பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடும் – 31-10-2017
——————————————————————————————————-
தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்திய கோரிக்கையானது யாழிலுள்ள பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மற்றும் மக்கள் அமைப்புக்களால் விடுக்கப்பட்டது இவர்களுடன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டார்கள்.

இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அவர்களுக்கு உதவியையும் ஆதரவையும் வழங்க வேண்டிய பெரும்பொறுப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் கல்விசார் சமூகத்தினருக்கும் நிச்சயம் உண்டு.

எனவே மாணவர்களோடு நாமும் இணைந்து போராடவேண்டியது அவசியம். அவ்வாறு இணைந்து போராடாவிட்டாலும் குறைந்தபட்சம் போராடும் மாணவர்களினது நலன்களை பேணும் நடவடிக்கைகளிலாவது ஈடுபடல் அவசியம். அதனை விடுத்து மாணவர்களிற்கு அநாவசியமான அச்சுறுத்தல்களையோ இடைஞ்சல்களையோ ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

மாணவர்களின் போராட்டம், அவர்களது கோரிக்கை நியாயம் என ஏற்றுக்கொண்டால் அதனை ஆதரிக்க வேண்டும் மாறாக எவராவது அல்லது எந்த அமைப்புக்களாவது அவர்களது கோரிக்கையோ, போராட்டமோ நியாயமற்றது என்றோ அரசியல் கைதிகளின் விடயத்தில் தாங்கள் மாறான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கருதினாலோ அவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படையாக வெளிப்படுத்துதல் வேண்டும். எவரும் ஒருபோதும் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்க முடியாது.

அந்தவகையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது ஏற்கனவே பொதுஅமைப்புக்களுடன் இணைந்து இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள், போராடியவர்கள் என்ற அடிப்படையிலும் பல்கலைக்கழக சமூகத்தின் ஓர் அங்கம் என்ற வகையிலும் மாணவர்களின் போராட்டம், அவர்களது கோரிக்கை நியாயம் என ஏற்றுக்கொண்டு அவர்களின் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அவர்களுடன் கரம்கோர்க்கின்றோம்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் – யாழ்ப்பாணம்
31-10-2017

இவ்வாறு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts