பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைச் செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்ட போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் எவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்.
தற்போதைய சூழலில் அவர்கள் அரசியல் கைதிகள் எனக் கூறப்பட்டாலும், யுத்தகாலத்தில் அவர்கள் பாரிய குற்றங்களுடன் தொடர்பு பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், இதன்காரணமாக அத்தகையவர்களை நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் இன்றி விடுதலைச் செய்வது சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் நீதிமன்ற செயற்பாடுகளில் தாமதங்கள் காணப்படுமாயின் அவற்றைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதன் பின்னர் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்குதல் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களை விடுவிப்பது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த உண்மை நிலைமைகள் எதுவுமே தெரியாத நிலையிலேயே வடக்கில் போராட்டங்களும், ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய ருவான் விஜேவர்தன, இவை அரசியல் இலாபம் அடையும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் மேலும் கூறியுள்ளார்.