அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பதற்கு நியாயமான எந்தவொரு காரணமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு தடவைகள் அவர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் இன்றி மீண்டும் சிறைவைக்கப்படுவதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியாளர்கள் பிரசன்னமாகாமை, அறிக்கைகள் கிடைக்கப்பெறாமை, வழக்கு தாக்கல் செய்யப்படாமை உள்ளிட்ட நியாயப்படுத்த முடியாத காரணங்களுக்காக அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் அரசியல் கைதிகள் இல்லாவிடின் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் இன்றி ஏன் அவர்கள் நீண்டகாலம் சிறைவைக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் உண்மை ஆனால் அவர்களை தடுத்துவைத்திருப்பதற்கான அரசியல் காரணம் என்னவென தமிழர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.