Ad Widget

அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வு என்ற பெயரில் தண்டிக்க முயற்சி! – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

அரசியல் கைதிகளுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாக, அரசியல் கைதிகள் விவகாரங்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றின் நீதிபதி ஐராங்கனி பெரேராவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்ட 14 அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் பிணை வழங்கப்பட்டவர்கள் சார்பிலேயே மேற்படி விடயம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று சிறப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ஐராங்கனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது கைதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான டீ.எஸ். ரத்னவேல், கே.வி. தவராசா ஆகியோர் மன்றில் பிரசன்னமாகினர்.

கடந்த 2015.11.11 மற்றும் 2015.11.16 ஆம் திகதிகளில் 39 அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனை எமக்கு கிடைத்துள்ளது என இதன்போது ஆஜரான பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி மன்றுக்கு அறிவித்ததுடன் அதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரினார். எனினும் அரசியல் கைதிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன் போது வாதத்தினை முன்வைத்த இரத்தினவேல் இந்த அரசியல் கைதிகள் (பிணை வழங்கப்பட்டவர்கள்) அனைவரும் அப்பாவிகள் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வரும்போதே கைது செய்யப்பட்டனர். அவர்கள் புனர்வாழ்வுக்கு விரும்பவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்றார்.

இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா தனது வாதத்தை முன்வைத்தார். உண்மையில் கடந்த நவம்பர் மாதம் 69 பேருக்கு பிணை வழங்கப்படுவதாக இருந்தது. எனினும் 39 பேருக்கு மட்டுமே பிணை வழங்கப்பட்டது.இதன்போது எந்த பிணை நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனினும் தற்போது 14 பேருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்கின்றனர். இது அசாதாரணமானது.

உண்மையில் சட்டமா அதிபர் சொலிசிற்றர் ஜெனரல் ஆகியோர் சிறைக்கு சென்று அரசியல் கைதிகளை சந்தித்தபோது அங்கு 99 பேர் புனர்வாழ்வுக்கு விருப்பம் தெரிவித்தனர். எனினும் அவர்களில் 14 பேருக்கு புனர்வாழ்வளிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தது. இந்நிலையில் நிபந்தனையின்றி பிணையில் விடுதலையான இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என கூறுவது வேடிக்கையானது. அதனை ஏற்கவும் முடியாது.

அவர்கள் அப்பாவிகள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினைக் கூட வழங்காதவர்கள். அவர்களை பலாத்காரமாக புனர்வாழ்வுக்கு உட்படுத்த முடியாது.அதனை வன்மையாக நாம் எதிர்க்கிறோம். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல் கைதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவே சிலர் முயற்சிக்கின்றனர். அப்படியாயின் குற்றமற்ற இவர்கள் தொடர்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். விசாரணை செய்து முடிவு செய்யலாம் என்றார்.

இதன் போது நீதிபதி ஏனைய அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்காது இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கவில்லை எனவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படவுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

Related Posts